நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நெல் மூட்டைகளை பாதுகாத்தோம் என்றும் கூறினார்.
மதுரை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான எடப்பாடி பழனிசாமி, மதுரை கப்பலூரில் செய்தியாளர்களை இன்று மதியம் சந்தித்து பேட்டி அளித்து உள்ளார். அவர் நெல் கொள்முதல் விவகாரம் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர், 15 நாட்களாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
நெல் மூட்டைகள் முளைத்திருந்தன. அவற்றை எங்கள் கண் எதிரிலேயே நாங்கள் பார்த்தோம். தினமும் நெல் மூட்டைகள் கொள்முதல் நடந்திருக்கும் என்றால் திறந்த வெளியில் அவை இருந்திருக்காது. தினசரி 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால் அவை தேங்கியிருக்காது.
ஆனால், தினமும் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் என அமைச்சர் தவறான தகவலை கூறியிருக்கிறார். நெல் கொள்முதல் மையங்களை பார்க்காமல், ரெயிலில் மூட்டைகள் ஏற்றப்படும்போது அதனை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்தால் பிரச்சனையாகும் என்று அவர்களை சந்திக்காமலே உதயநிதி ஸ்டாலின் சென்று விட்டார். நெல் கொள்முதலை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். ஆனால், நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறுகிறது. அத்தனையும் பொய் என தி.மு.க. அரசை கடுமையாக சாடினார்.
அமைச்சர்கள் 2 ஆயிரம் மூட்டைகள் என்கின்றனர். ஆனால், முதல்-அமைச்சர் ஆயிரம் மூட்டைகள் என்கிறார். இதில் யார் கூறுவது உண்மை? அமைச்சர் ஒன்று சொன்னால் முதல்-அமைச்சர் ஒன்று சொல்கிறார். நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார்.
நான் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன்.. அதனை வெளியே கூறினேன். இதில் என்ன அவதூறு இருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நெல் மூட்டைகளை பாதுகாத்தோம் என்றும் கூறினார்.






