அரசுப் பணிக்கான தேர்வுகளை அலட்சியப் போக்கில் கையாளும் தி.மு.க. அரசு - அண்ணாமலை கண்டனம்
இன்று நடைபெற்ற அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வை கைவிட்டு, முறையான மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரசு உதவி வழக்கறிஞர் பணியில், காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும், முதல் நிலை தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்கு, 4,000-க்கும் மேல் எண்ணிக்கையில் வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், தேர்வுகள் நடந்த பல மையங்களில், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, வழக்கறிஞர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், முறைப்படி விண்ணப்பித்த பல வழக்கறிஞர்கள் பெயர்கள், தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 4,000 வழக்கறிஞர்களுக்கான தேர்வு ஏற்பாடுகளையே முறையாக மேற்கொள்ளவில்லை என்றால், தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளை நம்பி அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதக் காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் நிலை என்ன?
அரசுப் பணிக்கான தேர்வுகளை இத்தனை அலட்சியப் போக்கில் கையாளும் தி.மு.க. அரசினை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக, இன்று நடைபெற்ற தேர்வைக் கைவிட்டு, மீண்டும் வெகுவிரைவில் முறையான மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.