பெண்களின் உரிமைக்காகவும், கல்விக்காகவும் தி.மு.க. தொடர்ந்து பணியாற்றும் - கனிமொழி எம்.பி. பேட்டி


பெண்களின் உரிமைக்காகவும், கல்விக்காகவும் தி.மு.க. தொடர்ந்து பணியாற்றும் - கனிமொழி எம்.பி. பேட்டி
x

கோப்புப்படம் 

பெண்கள் மீது முதல்-அமைச்சருக்கு மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித பாரபட்சமும் இன்றி குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் கைதானவர் மீது ஏற்கனவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது அந்த வழக்கை மறைத்துள்ளனர். குற்றவாளி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததோடு நகையையும் பறித்துள்ளார். அப்போது அதனை நகை பறிப்பு வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளனர்.

குற்றவாளிக்கு அன்றே சரியான தண்டனை கிடைத்து இருந்தால், ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அப்போது அவர்கள் கடமையை செய்யத் தவறியதே, தற்போது இதுபோன்ற சம்பவம் நடக்க காரணமாகிவிட்டது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக படித்து வரக்கூடிய தமிழகத்தில் எல்லா பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை எடுத்து சொல்லும்போது பெண்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதல்-அமைச்சரும், தி.மு.க.வும் பெண்களின் உரிமைக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது. பெண்கள் மீது முதல்-அமைச்சருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது. அதனால் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story