நெருங்கும் தீபாவளி... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்


தினத்தந்தி 20 Oct 2024 11:54 AM GMT (Updated: 20 Oct 2024 4:06 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட ஏதுவாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். குறிப்பாக துணிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக மின்சார ரெயில்களிலும், பேருந்துகளிலும் மக்கள் தி.நகருக்கு வருகை தருகின்றனர். பண்டிகை காலம் மற்றும் விடுமுறை தினம் என்பதால், மற்ற நாட்களை விட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். கடை வியாபாரிகளும் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் நிறைவு பெறாது. அந்த வகையில், பட்டாசுகளுக்கு புகழ்பெற்ற சிவகாசியில் பட்டாசுகள் வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கிச்செல்கின்றனர்.

மேலும், கோவை, சேலம், திருச்சி, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தீபாவளி விற்பனை களைகட்டி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், மழை இல்லாத சமயங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.


Next Story