ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள், மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் செய்வதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழர் திருநாளை தமிழர்களுக்கு ஏமாற்று திருநாளாக தி.மு.க. அரசு அமைத்துவிட்டது. பொங்கல் திருநாளில் பாரம்பரிய மண்வாசனையுடன், உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு உரிமையை ஜெயலலிதா அரசு பெற்று தந்தது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் எந்த முதல்-அமைச்சரும் செய்திடாத வகையில் முதன்முதலாக பச்சை கொடியசைத்து எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் தைத்திருநாளில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார்.
இந்த தை திருநாளில் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இங்கு ஊர் கமிட்டி, ஊர் பொதுமக்களை, மண்ணின் மைந்தர்களை ஒதுக்கிவிட்டனர். அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி ஜல்லிக்கட்டு விழாவாக அமைச்சர் மூர்த்தி நடத்தி வருகிறார். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். அப்போதுதான் அந்த சாமிக்கு பெருமை. ஆனால் இன்றைக்கு அரசு எந்திரத்தை தி.மு.க. கட்சி எந்திரமாக வைத்து நடத்தி, ஊர் கமிட்டியை ஊர் எல்லையில் நிறுத்தி விட்டார்கள். வாடிவாசலில் தி.மு.க. கட்சிகளை வைத்து விழாவை தொடங்கி உள்ளார்கள். இது ஜல்லிக்கட்டு விழாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஜல்லிக்கட்டு மதிப்பை சிதைப்பதாக உள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அனைத்து தரப்பினரும் பேசி இருக்கிறார்கள். ஆன்லைன் பதிவில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பாடாமல் விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.