வந்தே பாரத் ரெயில் கதவு திறக்காததால் திண்டுக்கல் பயணிகள் தவிப்பு
திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் வந்தபோது இரண்டு பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் 15க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்.
சென்னை,
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று ரெயில் திண்டுக்கல் வந்தபோது சி4, சி5 பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பெட்டியில் வந்த திண்டுக்கல் சேர்ந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இறங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் ரயிலும் புறப்பட்டு சென்றது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாயசங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். அதற்குள் ரெயில் நீண்ட தூரம் சென்று விட்டது. இதையடுத்து பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரி அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறினார்.
வேறு வழியின்றி பயணிகளும் சம்மதித்தனர். இதையடுத்து கொடைரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ரயில் கிளம்பி சென்றது. கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணிகளை துாத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற ரெயிலில் ஏற்றி திண்டுக்கல் அனுப்பி வைத்தனர்.