வளர்ச்சியடைந்த பாரதத்தின் வேலைவாய்ப்பு திட்டம்: பொருளாதாரத்தை முன்னேற்றும் சீரிய திட்டமாகும் - நயினார் நாகேந்திரன்

இத்திட்டத்தில் தமிழக இளைஞர்கள் மிகுதியாகப் பயன்பெற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதல்முறையாகப் பணியில் சேருவோரையும், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிதி உதவி வழங்கும் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் (PM-VBRY) இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின விழாவில் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று முதல் இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
முதல் முறையாகப் பணியில் சேருவோருக்கு 15,000 ரூபாயும் அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு நிதி உதவியும் அளித்து 2 ஆண்டுகளில் 3.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்ல இத்திட்டம், உண்மையிலேயே இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை நோக்கி முன்னேற்றும் ஒரு சீரிய திட்டமாகும்.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வழிவகுத்து அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதோடு, முன்னனுபவமற்ற இளைஞர்களைப் பணியமர்த்தி அவர்களின் திறனை மெருகூட்டும் விதமாக நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒரு அருந்திட்டத்தைக் கொண்டு வந்ததோடு, அதனை உடனடியாக செயல்பாட்டுக்கும் கொண்டுவந்த நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்புத் திட்ட இணையதளத்தில் பதிந்து இத்திட்டத்தில் தமிழக இளைஞர்கள் மிகுதியாகப் பயன்பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.






