வீரம்,விவேகம், தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர் - எடப்பாடி பழனிசாமி
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இந்தநிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதனைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டவர் முத்துராமலிங்க தேவர். வீரம்,விவேகம்,தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் தேவர். குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றிக்கண்டவர் முத்துராமலிங்க தேவர். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்பட்டது. 1994-ல் சென்னை நந்தனத்தில் தேவரின் முழு உருவ சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு 13.5 கிலோ தங்க கவசத்தை வழங்கி தேவருக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் கூறினார்.