கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.3.2025) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்டார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஏதுவாக துறைவாரியாக தரவு விவரப் புத்தகங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் உள்ளது.
1984-ம் ஆண்டு பொதுப்பணித் துறைக்கென கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகம் திருத்தியமைக்கப்பட்டு, இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, இதை உணர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு அனைத்து பொறியியல் துறைகளும் உபயோகிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகம் தயாரிக்க, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), தலைமையில் அனைத்து பொறியியல் துறைகளின் தலைமைப் பொறியாளர்கள் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டுமானங்கள், நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன கட்டுமான முறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாற்றங்களை கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரங்களின் மூலம் மதிப்பீட்டுத் தொகையினை ஒரே மாதிரியாக அனைத்து பொறியியல் கட்டுமானத் துறைகளிலும் மேற்கொள்ளும் வகையில், இக்குழு பலமுறை கூடி விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தொகுதி – 1 பொதுப்பணித்துறை, தொகுதி-2 பொதுப்பணித் துறை மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, தொகுதி-3 நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொகுதி 4, 5, 6, 7 & 8 - சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகிய 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கட்டுமானப் பொறியியல் துறைகள் அனைத்தும், எளிதான முறையில் மதிப்பீடு தயாரிக்க பெரிதும் பயன்படும்.
பொதுப்பணித் துறைக்கான கட்டுமானப் பணிக்களுக்கான இப்புதிய தரவு விவரப் புத்தகங்கள், 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தரவு விவரப் புத்தகங்களின் வாயிலாக அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள், வேலையாட்கள், இயந்திரங்கள் போன்றவற்றின் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) மணிகண்டன், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் ஆர். செல்வதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






