புயல் பாதிப்பு: நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்


புயல் பாதிப்பு: நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
x

இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

புயல் அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததால் உயிர்ப்பலி போன்ற பெரிய அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இப்பெரும் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2,000 கோடியை ஒதுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story