'வேர்களைத் தேடி' பண்பாட்டு சுற்றுலா; அயலகத் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு


வேர்களைத் தேடி பண்பாட்டு சுற்றுலா; அயலகத் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
x

'வேர்களைத் தேடி' பண்பாட்டு சுற்றுலாவில் கலந்து கொள்ள அயலகத் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

அயலகத் தமிழர் நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் 'வேர்களைத் தேடி' பண்பாட்டு சுற்றுலா பயணத்தில் கலந்து கொள்ள அயலகத் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"12.01.2024 அன்றைய செய்தி வெளியீட்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் "புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்" என அறிவித்தார்.

அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு சுற்றுலா திட்டம் "வேர்களைத் தேடி" என்ற பெயரில் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு கட்ட பயணங்களில் 157 அயலகத் தமிழ் இளைஞர்கள் இப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர். முதற்கட்ட பயணத்தில் (27.12.2023 - 12.01.2024) ஆஸ்திரேலியா, பிஜி, இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 57 மாணவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட பயணத்தில் (01.08.2024 -15.08.2024) தென் ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழகத்தின் முக்கிய வரலாற்று மற்றும் பண்பாட்டு சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வியல் மற்றும் கட்டிடக்கலை குறித்து விளக்கப்பட்டது.

தொடர் நிகழ்வாக, மூன்றாம் கட்ட பயணம் 29.12.2024 முதல் 12.01.2025 வரை பதினைந்து நாட்களுக்கு செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலாசார சுற்றுலா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கல்லணை அணை, திருவள்ளுவர் சிலை, வ.உ.சி நினைவிடம், கீழடி, பாம்பன் பாலம், சித்தன்னவாசல், கானாடு காத்தான் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் தாராசுரம் கோவில், மற்றும் மாமல்லபுரம் கோவில் போன்ற இடங்களுக்கு பங்கேற்பாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலாச்சார சுற்றுப்பயணத் திட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள், தகவல் அமர்வுகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

சென்னையில் தொடங்கும் இந்த பயணம் திருச்சிராப்பள்ளி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையும். இந்த பயணத்தின் இடையே 01.01.2025 அன்று நடைபெறும் அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பின் வெள்ளி விழா நிகழ்விலும் மற்றும் இந்த பயணத்தின் முடிவில் ஜனவரி 11 மற்றும் 12, 2025 ல் நடைபெறும் மாபெரும் கொண்டாட்டமான அயலகத் தமிழர் தின விழாவில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்பார்கள்.

இப்பயணத்தின் நிறைவினைத் தொடர்ந்து, அவர்கள் வாழும் நாடுகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே பண்பாட்டு தூதுவர்களாக செயல்பட்டு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தமிழர் வாழ்வியல் குறித்த விடயங்களை அவர்தம் நாடுகளில் பரப்பிடவும், தொழிற்சார்ந்த மற்றும் கல்விசார்ந்த தளங்களில் இணைந்து செயல்பட தங்களால் இயன்ற பணிகளை மேற்கொள்வர். இப்பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் அயலகத் தமிழ் இளைஞர்கள் https://nrtamils.tn.gov.in/portal/ryr என்ற வலைதள பக்கத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story