கடலூர்: ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது - தவெக தலைவர் விஜய்


கடலூர்: ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது - தவெக தலைவர் விஜய்
x
தினத்தந்தி 8 July 2025 3:37 PM IST (Updated: 8 July 2025 3:38 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடலூரில் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.

மோதிய வேகத்தில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர்(47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் ( 15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story