6 நாட்களாக கடலில் தத்தளிக்கும் மாடு: மீட்க முடியாமல் மீனவர்கள் தவிப்பு
பெரிய படகு இல்லாததால் மாட்டை காப்பாற்ற முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர்,
பெஞ்சல் புயல் கடந்த 30ம்தேதி இரவு தமிழக கரையை கடந்தது. அப்போது பெய்த அதிகன மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
அப்போது தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கடலூர் தாழங்குடி முகத்துவாரத்தில் மேய்ந்துகொண்டிருந்த 35க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பல மாடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தாழங்குடா பகுதியில் இருந்து 9 நாட்டிகல் மைல் தூரத்தில் மாடு ஒன்று உயிருக்கு போராடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் மாடு தத்தளிப்பதைக் கண்டு, அதற்கு குடிக்க தண்ணீர் வழங்கி உள்ளனர். ஆனால் பெரிய படகு இல்லாததால் மாட்டை காப்பாற்ற முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாகவும், கடந்த 6 நாட்களாக அந்த மாடு தத்தளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.