தி.மு.க. அரசால் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திக்கும் அவல நிலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


தி.மு.க. அரசால் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திக்கும் அவல நிலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

கோப்புப்படம் 

தி.மு.க. அரசால் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி, சேலை வழங்குவது வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் நடைமுறை. இந்த வேட்டி சேலைகள் விசைத்தறியாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி - சேலை வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, இவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 16-01-2025 அன்று நான் எனது அறிக்கை வாயிலாக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்த வேண்டுகோளை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.

இன்று பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு மாதங்கள் முடிய இருக்கின்ற நிலையில், இந்த ஆண்டிற்கான 1 கோடியே 77 லட்சம் சேலைகள், 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளில், 35 லட்சம் வேட்டி, சேலைகள் இன்னும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படவே இல்லை என்றும், அவை அனைத்தும் கூட்டுறவு சங்கக் கிடங்குகளிலேயே உள்ளன என்றும் விசைத்தறியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதான் தி.மு.க. ஆட்சியின் லட்சணம்.

தி.மு.க. அரசின் ஏமாற்று வேலை காரணமாக, கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திப்பதோடு, தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பயனாளிகளுக்கும் வேட்டி, சேலை சென்று சேரவில்லை. காலம் கடந்து கொண்டே செல்வதால், கூட்டுறவுச் சங்க கிடங்குகளில் தேங்கியுள்ள வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்யுமா என்ற சந்தேகம் விசைத்தறியாளர்களிடையே எழுந்துள்ளது. இந்த ஐயத்தை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசிற்கு உள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வேட்டி சேலைகளையும் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளித்து, வேட்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story