தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Nov 2024 10:11 PM IST (Updated: 3 Nov 2024 1:31 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

நீலகிரி,

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை தொடர்ந்து அரசு விடுமுறை, வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர். குறிப்பாக படகு இல்லத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள், மிதிபடகு, துடுப்பு படகு, மோட்டார் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், ஊட்டி சாலைகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நாளை ஞாயிறு விடுமுறை என்பதால், ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story