தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கவர்னரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினர் கவனக்குறைவாக "திராவிட" என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியைத் தவறவிட்டனர். இது குறித்து உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது கவர்னர் ஆர்.என்.ரவி மிகுந்த மரியாதை கொண்டவர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ இதில் எந்த தொடர்பும் கிடையாது. "
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.