கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நாளை பஸ்கள், ரெயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், இன்று மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு இணைய சேவை பாதிக்கப்பட்டது. நெட்வொர்க் பிரிச்சினை காரணமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அதே சமயம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் சில ஏ.டி.எம்.கள் மட்டுமே வேலை செய்ததால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.