கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் - போலீசார் வேண்டுகோள்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்துக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மன முதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை, தனது மகளை உடன் படிக்கும் மாணவியும், வேறு சில ஆண் நண்பர்களும் தவறான முறையில் வழிநடத்துவதாகவும், அவர்களில் ஒரு ஆண் நண்பர் பாலியல் சீண்டலுக்கு முயற்சி செய்ததாகவும், அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரானது சி.எஸ்.ஆர். ஆக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண் தோழி மற்றும் சில ஆண் நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர்.
இதில் பாலியல் குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்தவுடன் கடந்த 6-ந்தேதி எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 7-ந்தேதி திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (வயது 20), பள்ளி மாணவர் நரேஷ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை பொதுவெளியில் விமர்சிப்பது, சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்துக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இந்த வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.