கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை,
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக தேவையான பொருட்கள் வாங்க அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.
பின்னர் பொருட்கள் வாங்கி முடித்த பின்னர் தனது நிறுவனத்துக்கு திரும்பினார். அப்போது அவர் அந்தப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். சாலையில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக வந்து கொண்டு இருந்ததால் அதை கவனித்தபடி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவர் சாலையின் நடுவே வந்தபோது போலீஸ் ஏட்டு ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்ததால், அதை கவனித்த மோகன்ராஜ், சாலையின் நடுவே நின்றுவிட்டார். அவர் அருகே வந்தபோது திடீரென்று போலீஸ் ஏட்டு மோகன்ராஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு எதுவும் நடக்காததுபோன்று மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த காட்சி அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
எனவே வாலிபரை கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின்பேரில் அந்த போலீஸ் ஏட்டு யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.