சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: சென்னை மாநகராட்சி கட்டிடம் நாளை பொன்னிறத்தில் ஒளிரூட்டப்படவுள்ளது

இந்த பொன்னொளியானது நம்பிக்கை, மனவலிமை மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உயிரின் விலைமதிப்பற்ற தன்மையினை குறிக்கும் சின்னமாகும்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சிறுவர் புற்றுநோய் விழிப்புணர்வு செப்டம்பர் மாதத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ரிப்பன் கட்டடமானது நாளை (30.09.2025) மாலை பொன்னிறத்தில் ஒளிரும். இந்த பொன்னொளியானது நம்பிக்கை, மனவலிமை மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உயிரின் விலைமதிப்பற்ற தன்மையினை குறிக்கும் சின்னமாகும்.
இந்த விழிப்புணர்வு முயற்சியினை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து முழுமையான குழந்தைப் பருவ புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைப் பருவ புற்றுநோய் தன்னார்வ தொண்டு நிறுவனமான (CanKids KidsCan) வழிநடத்துகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பலர் சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் முழுமையான சிகிச்சையில் தடைகளை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 53% குழந்தைகள் மட்டுமே குழந்தைப் பருவ புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சையை அணுக முடிகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் உயிர்வாழும் விகிதம் 25-35% ஆக உள்ளது, வளர்ந்த நாடுகளில் 80% க்கும் அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் மற்றும் கல்வித் துறையுடனான அதன் கூட்டாண்மை மூலம் (CanKids) இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும், மருத்துவம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்கும் (9Access2Care)-ஐ அதிகரிப்பதற்கும் பாடுபடுகிறது. இந்த என்.ஜி.ஓ. 22 மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் 60 நகரங்களில் 141 புற்றுநோய் மையங்களில் செயல்படுகிறது.
இந்த முயற்சியைப் பற்றி (CanKids, Kidscan) இன் தெற்கு பிராந்தியத் தலைவர் லதா மணி பேசுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடத்தின் பொன்னிற ஒளி வெறும் அடையாளமாக மட்டுமல்லாமல், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒரு பொன்னான எதிர்காலமாகவும் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு முறையாக சிகிச்சையளிக்கப்பட்டால் குழந்தைப் பருவப் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது என்ற முக்கிய செய்தியை இது பரப்புகிறது.
எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த முயற்சி (CanKids) இன் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும், இது விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூகங்களை ஈடுபடுத்துதல் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆதரிப்பதற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






