முதல்-அமைச்சர் கோப்பை: இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்


முதல்-அமைச்சர் கோப்பை: இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்  உதயநிதி ஸ்டாலின்
x

வெற்றி பெற்ற வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.10.2025) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, மொத்தம் 9,75,000 க்கான பரிசுத் தொகை காசோலை, சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படும் முதல்-அமைச்சர் கோப்பை 2025-ஆம் ஆண்டிற்கான போட்டியையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 25.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகைக்காக மட்டும் 37.00 கோடி ரூபாய் உள்பட மொத்தம் 83.37 கோடி ரூபாயை முதல்-அமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசுப் பணியாளர்கள் என 5 பிரிவுகளில் 16,28,338 பேர் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து, 37 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30,136 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடந்த 2.10.2025 முதல் தொடங்கி 14.10.2025 வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 13 நகரங்களில் நடைபெற்று வரும் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு, முதல்-அமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டிகளில் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டை காட்சிப் பிரிவாக (Demonstration Sport) அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு மிகுந்த வெற்றியைப் பெற்று, மாநில மற்றும் தேசிய அளவிலான அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தகைய வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் (GEM Awards), தமிழ்நாடு (‘Best State Contribution to e-Sports’) என்ற விருதினைப் பெற்றது.

இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (Olympic Council of Asia), வரவிருக்கும் 2026-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மொத்தம் 11 இ-ஸ்போர்ட்ஸ் பிரிவுகள் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளது. மேலும், சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee - IOC) முதலாவது ஒலிம்பிக் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை 2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடத்த தீர்மானித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுப் பிரிவில் ஆன்லைன் தகுதித் சுற்றுக்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்தனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்ற 6 விளையாட்டுகளில் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

மாநில அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பை - 2025 இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகளில் 3 விளையாட்டு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (12.10.2025) தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து, மொத்தம் 9,75,000 க்கான பரிசுத் தொகை காசோலைகள், சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.

முன்னதாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டில் முதல்முறையாக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 14.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி கூடைப்பந்து பயிற்சி இயந்திரம் மற்றும் 14.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி வாலிபால் பயிற்சி இயந்திரங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் வே. மணிகண்டன், பொதுமேலாளர் எல். சுஜாதா, ஸ்கை இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு இ-ஸ்போர்ட்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 More update

Next Story