சென்னை: திருடச்சென்ற வீட்டில் வசமாக சிக்கிய வாலிபர்

போலீசார் வருவதை அறிந்துகொண்ட வாலிபர் கட்டிலுக்கு அடியில் சென்று மறைந்து கொண்டார்.
சென்னை,
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அந்த வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தம் போட்டனர். இதனால் அந்த வாலிபர் பயத்தில் வீட்டின் கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்துகொண்ட வாலிபர் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் கட்டில் அடியில் இருந்த திருடனை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பாலமுருகன் என்றும் அவரது பெயரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






