சென்னை: வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பெண் - போலீசார் விசாரணை

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ,
சென்னை கோயம்பேடு, மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது50) வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் பாரிமுனை பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு செல்வதற்காக 100அடி சாலையில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக கால் தவறி தனலட்சுமி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு காயமடைந்த அவர் பூவியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண் சென்று பார்த்தபோது தனலட்சுமி படுக்கையில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் தனலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாகவே உள்ளது தலையில் பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை எடுக்காததால் அதிக ரத்தம் வெளியேறி தனலட்சுமி உயிரிழந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்கிற பல்வேறு கோணங்களில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.






