சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன, அல்லது வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன.
அந்த வகையில், தெற்கு ரெயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் பணிமனையில் நடைமேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்கு பிறகு ஞாயிறு அட்டவணைப்படி ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கீழ்க்கண்ட ரெயில்கள் முழுமையாகவோ, அல்லது பகுதி நேரமாகவோ ரத்து செய்யப்படுகின்றன.
* திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை-தாம்பரம் பயணிகள் ரெயில், நாளை சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில், நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரெயில், நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 05:20 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரெயில், செங்கல்பட்டில் நிறுத்தப்படும். இந்த ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே நாளை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில், நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.