காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - டி.டி.வி. தினகரன்


காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.

சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலரின் செயினை பறித்துவிட்டு தப்பியோடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில் அதே கொள்ளையர்கள் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கியுள்ளதா? அல்லது முடக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது கண்விழித்து இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story