மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர முடிவு


மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர முடிவு
x
தினத்தந்தி 3 Dec 2024 7:58 AM IST (Updated: 3 Dec 2024 8:03 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

திருவண்ணாமலை,

நேற்று முன் தினம் (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது.

இந்த சூழலில் இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'பெஞ்சல்' புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

இதேபோல் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி.நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இந்த மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென உருண்டு குடியிருப்புகளுக்கு மேல் விழுந்ததில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது.

புதைந்த அந்த வீட்டுக்குள் ராஜ்குமார்(32), அவருடைய மனைவி மீனா (26), அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் ராஜ்குமார் உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகிய 7 பேர் சிக்கிக் கொண்டனர். தகவலின்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் அதிகாரிகள் சென்று 7 பேரையும் மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

முதல்கட்டமாக அந்த பகுதியில் வசித்த 80 பேர் நிவாரண முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்ததாலும் அங்கிருந்து மண்ணை வெளியேற்ற முடியாததாலும் இரவு நேரம் என்பதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதற்கிடையே அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை திருவண்ணாமலை சென்றனர். அவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புக்குழு,, மாவட்ட போலீஸ் கமாண்டோ குழு, மாநில மீட்பு படை, திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசார் உள்பட 170 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. இதையடுத்து அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு மண்ணுடன் சேர்ந்து ஒருபாறையும் இருந்தது. இதையடுத்து அந்த பாறையை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பாறையை அப்புறப்படுத்தினால்தான் மற்ற 2 குழந்தைகளையும் மீட்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நேற்றிரவு மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் உடல்களை தேடும் பணி நடைபெற உள்ளது.

5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த கோர சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story