நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்


நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
x

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரூ. 1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க. சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தலைவர்கள், பெண்கள் உள்பட அக்கட்சி தொண்டர்கள் மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இதனால், பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

6 மணிக்குமேல் ஆகியும் விடுதலை செய்யாததால் போலீசாருடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தமிழிசை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், 6 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு. நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என்னை வேண்டுமானால் கைது செய்துகொள்ளுங்கள் ஆனால் என்னுடன் வந்த கட்சி பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்றார்.


Next Story