அதானி விவகாரத்திற்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - எச்.ராஜா


அதானி விவகாரத்திற்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - எச்.ராஜா
x

அய்யப்ப சுவாமியை பற்றி கேலியும், கிண்டலுமாக சிலர் பேசி வருகிறார்கள் என்று எச்.ராஜா கூறினார்.

கரூர்,

கரூரில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலையிட்டு பக்தர்கள் செல்லுகிற சமயத்தில் அய்யப்ப சுவாமியை பற்றி கேலியும், கிண்டலுமாக சிலர் பேசி வருகிறார்கள். இதற்கு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4 நாட்களில் சமூக வலைதளங்களில் இந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதானி விவகாரத்திற்கும், பிரதமருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. வங்காளதேச அரசாங்கம் மின்சாரத்திற்கான தொகையை கொடுக்கவில்லை. அப்போது அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தும் அதானி மின்சார வினியோகத்தை நிறுத்திவிட்டார். அதனால் இப்படியொரு குற்றச்சாட்டு வந்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஷ்கார், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் அதானி சோலார் பவர் ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறவில்லை. அதனால் அதானி விவகாரத்திற்கும், பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story