ஊட்டி சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஊட்டியில் கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள்.
ஊட்டி,
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களுக்காக கோடை விழாவும் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை என 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது.
தற்போது கோடை சீசன் நிறைவடைந்ததால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் படப்பிடிப்பிற்கான தடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்பிக்கு அனுமதி தேவைப்படுபவர்கள் அலுவலகத்தை அணுகி கட்டணத்தை செலுத்தி படப்பிடிப்புகள் நடத்தலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






