தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் - வேல்முருகன் கண்டனம்
விளையாட்டுப் போட்டியில் கூட தமிழர்கள் வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை ,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பல்கலைக்கழகங்களின் சார்பில் அதன் அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியும் பஞ்சாபின் குரு காசி பல்கலைக்கழக அணியும் விளையாடிய நிலையில் முன்னணியில் இருந்த எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணிக்கு எதிராகவும் பஞ்சாப் பல்கலைக்கழக அணிக்கு ஆதரவாகவும் முடிவுகள் வழங்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற அணிகள் மற்றும் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் ஒரு பயிற்சியாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் வகையில் நடத்தப்படும் விளையாட்டு போட்டியில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெறுவதை ஏற்க்க முடியாத அளவிற்க்கு வட இந்தியர்களின் தமிழர் விரோத மனநிலையும் வன்மமும் இருக்கிறது.
மேற்கண்ட தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.