மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை காவல்துறை விளக்கம்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கமளித்துள்ளது.
சென்னை,
சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம்.
பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பது சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அவரது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.