கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதி கருத்து - அண்ணாமலை

டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க அனைத்து உரிமையும் உண்டு. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்திருப்பதில் தவறு இல்லை. ரகசிய விசிட் கிடையாது. கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவின் கருத்தை இறுதி கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டிய் அவசியம் பாஜகவுக்கு இல்லை.இன்னொரு கட்சியை அழித்துதான் வளர வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் பாஜகவுக்கு இல்லை. சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவுடன் முதன்மை பெறவில்லை. மோசமான முதல்வராக இருந்தால் கூட அவருக்கு 43 சதவீதம் ஆதரவு கருத்து கணிப்பில் இருக்கும். ஆனால் அதைவிட மு.க.ஸ்டாலினுக்கு குறைவாகவே ஆதரவு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நான் அரசியலுக்கு வந்திருப்பது பலருக்காக அல்ல, மக்களுக்கு பணியாற்றவும், பாஜகவுக்கு உழைக்கவும் அரசியலுக்கு வந்திருக்கிறே்ன். யாரையும் கடந்த காலங்களில் தவறாக விமர்சித்ததில்லை. அவர்கள் சொன்ன கருத்துகளுக்குத்தான் பதில் சொல்லி இருக்கிறேன்.எனது நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. மாற்றி மாற்றி பேசுவது எனக்கு பழக்கம் கிடையாது. எனது கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன். கருத்துகளை கருத்துகளால்தான் எதிர்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி ஏப்.6-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
விஜய்க்கு தமிழக போலீசார் பாதுகாப்பு வழங்காத நிலையில், மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். விஜய்க்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதில் எந்தவித அரசியல் காரணமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.