அமித்ஷா சர்ச்சை பேச்சு: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதிலடி


அமித்ஷா சர்ச்சை பேச்சு: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதிலடி
x

அமித்ஷா சர்ச்சை பேச்சுக்கு அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளனர்.

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. அம்பேத்கர் பெயரை கூறுவதைவிட்டு கடவுள் பெயரை சொன்னால் சொர்க்கமாவது கிடைக்கலாம்" என அமித்ஷா கூறினார்

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதேபோன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு அமித்ஷா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மத்திய மந்திரி அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்" என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம். வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story