ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 284 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 284 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 284 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவிற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தலா 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி. பேடு, கட்டுப்பாட்டு கருவி ஆகியவை முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த 11-ந்தேதி முடிக்கப்பட்டு, மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் தயார் நிலையில் உள்ளன.

இதில் 237 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான எந்திரங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 20 சதவீதம் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 30 சதவீதம் வி.வி.பேடு கருவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி 284 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு கருவிகள், 308 வி.வி.பேடு கருவிகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

இதில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, தேர்தல் தாசில்தார் சிவசங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே இடைத்தேர்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள எந்திரங்கள் மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மனிஷிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று மாலையில் 284 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு கருவிகள், 308 வி.வி.பேட் கருவிகள் ஆகியன குடோனில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story