உடல்நிலை சரியில்லாத தந்தை... வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி வனஜா. இவர்களுக்கு சந்துரு (வயது 25) என்ற மகன் இருந்தார். சுந்தரம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு தந்தை முடங்கிப்போனது சந்துருவை மிகவும் பாதித்தது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் சுந்தரத்தை ஆஸ்பத்திரியில் கவனித்துவிட்டு கடந்த 5-ந்தேதி இரவு சந்துரு வீட்டுக்கு வந்தார். பின்னர் மறுநாள் காலை 10.30 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவதாக தாயார் வனஜாவிடம் சந்துரு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் மறுநாள் ஆஸ்பத்திரிக்கு அவர் செல்லவில்லை. வனஜா செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது சந்துரு போனை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் பதற்றமடைந்த அவர், உடனே உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பி சந்துருவை அழைத்து வரும்படி கூறினார்.
அதன்பேரில் உறவினர் உடனடியாக சந்துருவின் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் சந்துரு தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர், உடனே இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தெரிவித்தாா்.
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து சந்துரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சுந்தரம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் மனவேதனையில் சந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.