சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் 17-ம் தேதி வாக்கெடுப்பு


சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் 17-ம் தேதி வாக்கெடுப்பு
x
தினத்தந்தி 14 March 2025 9:05 AM (Updated: 14 March 2025 11:41 AM)
t-max-icont-min-icon

அதிமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து (17-ம் தேதி) திங்கட்கிழமை விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை,

சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக ஏற்கனெவே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே பதில் அளித்து உள்ளோம். யார் பேசுவதையும் காட்ட கூடாது என குறுகிய எண்ணத்துடன் இந்த அரசு செயல்படவில்லை. கடந்த முறை டெக்னிக்கல் பிரச்சினை என சட்டமன்றத்தில் பதில் அளித்து உள்ளேன். இனி அப்படி ஒன்றும் நடைபெறாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக 17-ம் தேதி (திங்கள்கிழமை) பேரவையில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்றைய தினம் சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும்போது சபாநாயகர் அப்பாவு அவரது இருக்கையில் இருக்கமாட்டார். அந்தநேரத்தில் துணைசபாநாயகரோ,மாற்று தலைவர்களோ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படும்.


Next Story