கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன் உள்ளிட்ட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு, கோவை கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் புலன் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. புதிய மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற முரளிதரன் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி. கோவை கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் கொலை, கொள்ளை நடைபெற்ற கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு, சம்பவம் நடைபெற்ற கோடநாடு பகுதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என அரசு தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி முரளிதரன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story