கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை


கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை
x

கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கோவை,

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, சீரடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சார்ஜா, சிங்கப்பூர் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை-சென்னை இடையே தினமும் 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதுபோன்று ஐதராபாத்துக்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் கோவை-சென்னை இடையே 9-வது புதிய விமானமும், கோவை-ஐதராபாத் இடையே 5-வது புதிய விமான சேவையும் 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை-சென்னை, கோவை-ஐதராபாத் இடையே கூடுதலாக நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஜனவரி 14-ந் தேதி முதல் இந்த புதிய சேவை தொடங்கப்படும். 180 இருக்கைகள் கொண்ட 5-வது தினசரி ஏ-320 ரக விமான சேவையை ஐதராபாத்-கோவை இடையே இயக்கப்படுகிறது.

இந்த புதிய விமானம் ஐதராபாத்தில் இருந்து (விமானம் எண்:- 6இ-454) காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 8.35 மணிக்கு கோவை விமானநிலையத்தை வந்தடையும். கோவையில் இருந்து இந்த விமானம் (எண்:-6இ-785) காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

இதுபோன்று கோவை விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு வருகிற 14-ந் தேதி புதிய விமான சேவை இயக்கப்படுகிறது. இந்த விமானம் செவ்வாய்க்கிழமைதோறும் மட்டும் இயக்கப்படும். சென்னையில் இருந்து (விமானம் எண்:- 6இ-6141) மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு கோவை வந்தடையும். கோவையில் இருந்து (விமானம் எண்:- 6இ-6141) மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு சென்னை சென்றடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story