அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Dec 2024 12:12 PM IST (Updated: 10 Dec 2024 12:36 PM IST)
t-max-icont-min-icon

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் பேசப்படுவதாக அவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை என்று அதானி குழும முதலீடு தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணிக்கு பதிலளித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். நான் அதானியை சந்திக்கவில்லை. அதானி விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். அதானி முதலீடு பற்றி பொதுவெளியில் வரும் தகவல் குறித்து செந்தில் பாலாஜி ஏற்கனவே பதில் அளித்துள்ளார்.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென 'இந்தியா' கூட்டணி வலுயுறுத்துகிறது. பா.ஜ.க., பா.ம.க. இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா என்பதை விளக்க வேண்டும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில் அதானி விவகாரத்தில் முதல்-அமைச்சர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு செய்தது.


Next Story