நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்


நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 10 Nov 2024 12:49 PM IST (Updated: 10 Nov 2024 1:26 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மூத்த நடிகர் டெல்லி கணேஷ், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

"மூத்த திரைக்கலைஞர் 'டெல்லி' கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story