மகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாயார் புகார்


மகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாயார் புகார்
x

விக்னேஷின் தாயார் மனுவை போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு டாக்டராக பாலாஜி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் டாக்டர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் இருந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே வந்த ஒரு வாலிபர் டாக்டர் பாலாஜியிடம் காரசாரமாக பேசினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்ற தன்னுடைய தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று வாக்குவாதம் செய்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெறித்தனமாக டாக்டர் பாலாஜியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், டாக்டரை கத்தியால் தாக்கிய விக்னேஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது மகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் பிரேமா சார்பில் அவரின் மற்றொரு மகன் லோகேஷ் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், " தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவர் மீது எனது மகன் தாக்குதல் நடத்தினார். எனினும் எனது மகனை அங்கிருந்த 4 பேர் ஆபாசமாக திட்டி, காலால் எட்டி உதைத்து தாக்கி உள்ளனர். அவன் இதய நோயாளி என தெரிந்ததும், அவரின் மார்பில் எட்டி உதைத்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த புகார் மனுவை கிண்டி காவல்நிலைய போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story