பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கங்காபரமேசுவரி நகரில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூங்காவில் கடந்த 24-ந் தேதி காலை 7.30 மணி அளவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 24 வயதான இளம்பெண் ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பூங்காவில் இருந்த மர்மநபர், இளம்பெண் தனியாக நடைபயிற்சி மேற்கொள்வதை அறிந்து அவரிடம் ஆபாசமான சைகை காண்பித்தும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அந்த இளம்பெண் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று தனது தந்தையிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு கல்மேட்டை சேர்ந்த கருப்பசாமி மகன் தென்மலை தென்குமரன் என்பது தெரியவந்தது. இவர் தற்போது கங்கா பரமேசுவரி நகரில் வசித்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.