மக்கள் விரும்பாத மொழியை திணிக்கக் கூடாது - மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் சண்முகம் பேச்சு

கோப்புப்படம்
திசை திருப்பும் அரசியலில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார் என்று சண்முகம் கூறியுள்ளார்.
கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநில மாநாட்டின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்கள் விரும்பாத மொழியை திணிக்கக் கூடாது. இந்த பிரச்சினையை திசை திருப்பும் அரசியலில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இந்த திசை திருப்பும் அரசியலுக்குள் தி.மு.க. சென்றுவிட கூடாது.
தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கும் செயலில் ஈடுபடும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும். சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நிலம் எங்கு இருக்கிறது என அடையாளம் கண்டு அதனை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






