நெல்லை அருகே மொபட் மீது பஸ் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு


நெல்லை அருகே மொபட் மீது பஸ் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 Nov 2024 11:35 PM IST (Updated: 15 Nov 2024 12:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவி மீது, பஸ் மோதியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

நெல்லை,

நெல்லை அருகே மானூரை அடுத்த வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பால்துரை, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி எஸ்தர் மேரி. இவர்களுக்கு 4 மகள்கள்.3-வது மகள் செல்வம் (வயது 19), பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் சுதர்சனா (15), நெல்லை டவுனில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

காலையில் செல்வம் தனது தங்கை சுதர்சனாவை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்காக மொபட்டில் நெல்லை-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள சிவாஜிநகர் பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வந்த டவுன் பஸ்சில் சுதர்சனா ஏறியதும், அந்த பஸ்சின் முன்பாக செல்வம் மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சுரண்டையில் இருந்து அழகியபாண்டியபுரம் வழியாக நெல்லை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மொபட் மீது மோதிய தனியார் பஸ்சின் முன்பக்க கேமராவில் விபத்து வீடியோ பதிவாகி இருந்தது. நெஞ்சை பதைபதைக்கும் வகையில் பதிவாகி இருந்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story