திருவாடானை அருகே ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பீரோ சாய்ந்து சிறுவன் உயிரிழப்பு


திருவாடானை அருகே ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பீரோ சாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
x

ஊஞ்சல் கட்டி விளையாடியபோது எதிர்பாராதவிதமாக மர பீரோ சாய்ந்து சிறுவன் மீது விழுந்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை படையாச்சி தெருவைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மகன் மனோஜ் (வயது 12). மனோஜ் தொண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் மனோஜ் மற்றும் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் ஒரு அறையில் இருந்த மர பீரோவிற்கும், ஜன்னலுக்கும் இடையே ஊஞ்சல் கட்டி விளையாடினர். எதிர்பாராதவிதமாக அந்த மர பீரோ சாய்ந்து விளையாடி கொண்டிருந்த மனோஜ் மீது விழுந்தது.

இதில் சிறுவன் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தான். சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக மனோஜ் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீரோ சாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story