ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம்
திண்டுக்கல்லில் ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பெரியமலையூரை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகன் ரகுபதி (வயது 17). சின்னச்சாமி கடந்த ஒரு மாதமாக சிறுமலையை அடுத்த தென்மலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தோட்ட வேலை செய்து வருகிறார். ரகுபதி 11-ம் வகுப்பு வரை படித்து உள்ளான்.
பின்னர் சரிவர படிக்காததால், தனது தந்தையுடன் சேர்ந்து எஸ்டேட்டில் தங்கி இருந்தான். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி ரகுபதியும், அதே பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவரின் 10 வயது சிறுவனும் தனியார் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எஸ்டேட் உரிமையாளரின் வீட்டில் இருந்த ஏர்கன் துப்பாக்கி ஒன்றை 10 வயது சிறுவன் எடுத்து வந்து ரகுபதியிடம் காட்டி விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி விசையில் சிறுவனின் கைவிரல் பட்டதாக தெரிகிறது. அதில் துப்பாக்கி வெடித்ததில் எதிரே நின்ற ரகுபதியின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதில் அவன் படுகாயமடைந்து வலியால் அலறி துடித்தான். ரகுபதியின் அலறல் சத்தம் கேட்டு சின்னச்சாமி மற்றும் சக தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரகுபதியை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்கன் துப்பாக்கிக்கு உரிமம் தேவை இல்லை என்றும், தோட்டப்பகுதியில் பறவைகளை சுடுவதற்கு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.