7.5 சதவீத இடஒதுக்கீடு: மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க கல்வித்துறை உத்தரவு


7.5 சதவீத இடஒதுக்கீடு: மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க கல்வித்துறை உத்தரவு
x

கோப்புப்படம்

மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பயன்பெற உள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிகளுக்கு, கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (நாட்டு நலப்பணித்திட்டம்) சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 2024-25-ம் கல்வியாண்டில் 18,35,456 மாணவ-மாணவிகள் விவரங்களை சரிபார்த்தல் மற்றும் 24,646 மாணவ-மாணவிகள் விவரங்களை உள்ளீடு செய்தல் போன்ற பணிகள் நிலுவையில் இருக்கிறது. 7.5 சதவீத இடஒதுக்கீடு தேர்வு செய்யப்படாமல், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்க இயலாது.

7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபார்த்தல் எமிஸ் தளம் வாயிலாக மேற்கொள்ளப்பட இருப்பதால், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் படித்த விவரங்களை தமிழ்வழி, ஆங்கிலவழி போன்ற விவரம் விடுதல் இன்றி தேர்வு செய்து பள்ளி ஆசிரியர்கள் சரிபார்த்து 7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபார்த்தல் பட்டியலை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story