யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரம்: 5 பேர் கைது

கோப்புப்படம்
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மைப் பணியாளரை அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரத்தில் பதிவான விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே சவுக்கு சங்கர், காவல் ஆணையரகத்தை குற்றம்சாட்டியிருந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.