கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 5 பேர் கைது

கோப்புப்படம்
அப்பகுதி மக்கள் அவர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வசந்தகுமார் (24), மாரிமுத்து (27), சென்னையை சேர்ந்த சஞ்சய் குமார் (25), திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்த தினேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திருச்சி முதலியார் சத்திரம் ஆலம் தெருவை சேர்ந்த முகமது ரபீக் (21) சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் முகமது ரபீக் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து, முகமது ரபீக் அவரை விரட்டி சென்று பிடித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.






