கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் - நடிகை அம்பிகா நேரில் ஆறுதல்

நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில், கடந்த 16-ந்தேதி மக்காச்சோள வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரியநாச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 40), கழுதூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களான கனிதா(35), பாரிஜாதம்(40), சின்னப்பொண்ணு(எ) ராஜேஸ்வரி(41) ஆகிய 4 பேர் திடீரென இடி மின்னல் தாக்கியதில், விவசாய நிலத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானது இல்லை என்றும், நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், திரைப்பட நடிகை அம்பிகா, கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.






